|
கம்யூனிஸம் மற்றும் பொதுவுடைமைக் கொள்கையின் தந்தை எனப்படும் கார்ல் மார்க்ஸ் பெயரில் ஒரு கடன் அட்டை வந்துள்ளது.
இதை ஜெர்மனியில் ஒரு வங்கி செய்திருக்கிறது.
கார்ல் மார்க்ஸ் பெயரில் credit card என்பதும் அல்லாப் பிச்சை பெயருடைய ஒருவருக்கு அந்தணர் ஒருவர் அமாவசைத் தர்ப்பணம் செய்வதும் ஒன்று என்பது என் வாதம்.
விஷயம் அவ்வளவு அபத்தம் ... அனால் நிகழ்ந்து விட்டதே!
1989ல் முதலாளித்துவ ஜெர்மன் அரசின் விருந்தினனாக ஜெர்மனிக்கு இரண்டாவது முறையாகச் சென்றேன்.
கிழக்கு – மேற்கு எனப் பிரிந்திருந்த ஜெர்மன் நாடு ஒன்றான காலத்தின் ஆரம்பம் அது.
இடிந்து, குட்டிச் சுவராகிவிட்டிருந்த பெர்லின் நகரின் அவமானச் சின்னத்தின்மீது சில நிமிடங்கள் நின்று இருபுறமும் பார்த்தேன்.
ஒரு புறம் செல்வச் செழிப்பு.
மறுபுறம் ஏழ்மையின் வீழ்ச்சியின் வீச்சுக்கள்.
நான் போட்ஸ்டாம் நகர் வரைச் செல்ல ஏற்பாடு ஜெர்மன் அரசு செய்திருந்தது.
பெர்லின் நகரிலிருந்து 24 கி.மீ. மட்டும்தான்.
அரசு அளித்திருந்த பென்ஸ் வண்டி, தூரத்தை ஊதித் தள்ளிவிட்டது.
அங்குள்ள ஸிஸீலியன்ஹோஃப் மாளிகையில் உலாத்தினேன்.
1945 ஜுலை மாதம் 17 முதல் ஆகஸ்டு 2 வரை ப்ரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அக்காலத்து அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் மற்றும் ரஷ்ய சர்வாதிகாரி யோசிஃப் விஸ்ஸாரியானோவிச் ஸ்டாலின் ஆகிய மூவர் கூடி அமர்ந்து பேசி – இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்து – கையெழுத்திட்டு ஜெர்மன் நாட்டை இரண்டாக்கி – அதன் தலை நகர் பெர்லினையும் இரு துண்டுகளாகப் புண்டனர்.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தான அறையில் சில நிமிடங்கள் நின்றேன்.
எவனுடைய நாட்டையோ, எதற்காகவோ, யார் யாரோ இஷ்டத்துக்குக் கூறு போட்டனரே, என என் மனதில் எண்ணங்கள் பாய்ந்தன.
எந்தக் காரணமும் இல்லாமல், என் கண் முன் ஆப்பிரிக்க நாட்டின் வரை படம் தோன்றியது.
பல நேர் கோடுகளாக வரையறுக்கப்பட்ட அந்தக் கண்டத்தின் எல்லைகளை இன்று யாவரும் வரைபடங்களில் காணலாம்.
அவையும் அவமானச் சின்னங்களே!
குழந்தைப் பருவத்தில் இரு சகோதரர்களுக்கு ஒதுக்கப்படும் சிறிய மெத்தையின் மீது ஒருவன் ஒரு கோட்டைக் கிழித்து, “இப்போது முதல் இது எனது இடம் – அந்தப் பகுதி மட்டுமே தான் உன்னுடையது,” எனச் சொன்னால் எப்படியிருக்குமோ – அதே பொல ஒரு பெரிய கண்டத்தையும் அதன் கலாச்சாரத்தையும் கண்ட துண்டமாக வெட்டி, இரு ஓரங்களிலும் சிப்பாய்களை நிற்க வைத்து, சுங்க வரி, சுண்ணாம்பு வரி என்றெல்லாம் உருவாக்கி, சண்டைகளுக்கு வழி வகுத்து, பொறாமைகள் பெருகப் பள்ளங்களைத் தோண்டி … வெள்ளையர்கள் நன்றாக விளையாடி, கொள்ளையடித்து நாடு திரும்பி – அந்தத் தவறுகளை எல்லாம் ஐரோப்பாவிலிருந்து நீக்க – ஐரோப்பிய பொருளாதார ஒற்றுமை நாடுகள் [European Economic Unity Nations] உருவாக, வழிவகுத்ததன் முதல் அடையாளமே – இரு ஜர்மெனிகளின் இணைதல் என உணர்ந்தேன்.
இரண்டாம் உலகப்போரில் – ஐரோப்பாவில் ஜெயித்த ஹீரோ நாடுகள் – இங்கிலாந்து, அமெரிக்கா, ஃப்ரான்ஸு, சோவியத் ஐக்கியம் – இத்யாதி.
ஐரோப்பிய வில்லன்கள்: ஜெர்மனி, இத்தாலி.
ஆசிய வில்லன் – ஜப்பான்.
ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, அந்த நாட்டை தோல்வியின் அடையாளமாக வென்றவர்கள் மண்டியிட வைத்து எங்களது நாட்டுக்கான இயந்திரப் பொருட்களை உற்பத்தி செய்க! என கட்டளையிடப்பட்டு, டிரான்ஸிஸ்டர்கள், மின்சார க்ஷவர இயந்திரங்கள், விலை குறைந்த நான்கு சக்கர வாஹனங்கள் என “சகாய விலையில்” உருவாயின.
மேற்கில் ஹீரோ நாடுகளின் வெற்றியின் அறிகுறியாக – ஜெர்மனி இரண்டானது.
அதன் பரிணாம வளர்ச்சியாக, கிழக்கு-மேற்கு ஐரோப்பாக்கள் உருவாயின.
கம்யூனிஸ சோவியத் ஐக்கியத்தின் சிவப்பு நிழல் மேற்கு நோக்கி நீண்டது.
இரும்புத் திரை நாடுகளின் எல்லைகள் வளர்ந்தன.
அந்த வளர்ச்சி, தளர்ச்சியானதன் சின்னம் தான் ஜெர்மனியின் இணைப்பு, என உணர்ந்தேன்.
வெள்ளையன் பிழைக்கும் வழியைக் கண்டுபிடித்து செட்டில் ஆகப் போகிறான்.
அவனுக்கு அமைதி திரும்புகையில் – மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் எனும் முட்டாள்களின் மண்டைகள் உருளும். அவர்களது வாரிசுகள் அதே மண்டை ஓடுகளை கப்பரை ஆக்கி, தங்களை கௌரவப் பிச்சைக்காரர்கள் என உலகுக்குத் தெரிவிப்பதில் உவகை கொள்ளும் வெறும்பயல் வெண்ட்ருகள் ஆவார்களே என நினைத்தேன்.
ஒரு விரக்தியான நமட்டுச் சிரிப்பு வந்தது.
பெர்லினின் முதலாளித்துவப் பகுதியை இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், அமெரிக்கா ஒன்று சேர்ந்து ஆள்வது எனவும் – அதன் நான்காம் பகுதியை ரஷ்யா [சோவியத் ஐக்கியக் குடியரசுகள் குழுமம்] ஆள்வது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டதாம்.
இன்று பெர்லின் ஜெர்மனியின் தலை நகர்.
அதை ஜெர்மானியர்கள் தான் ஆள்கின்றனர்.
1950 முதல், இரண்டாம் உலகப்போரில் தோற்ற ஜெர்மனியும் இத்தாலியின் உரோமாபுரி நகரின் ஒரு பகுதியான கத்தோலிக்கத் நாடான வாட்டிக்கனும் சேர்ந்து தோல்வியை வெற்றியாக்கத் திட்டமிடத் துவங்கின.
ஐரோப்பிய பொருளாதார ஒற்றுமைக்கு வழி வகுத்தன.
வெற்றியும் கண்டுவிட்டன. அந்த வெற்றியின் சின்னம் தான் இன்றைய ஈ. யூ. [EU].
கிட்ட்த்தட்ட 1500 ஆண்டுகளாகக் குடுமிப்பிடி, வாள்வீச்சு, துப்பாக்கி சூடு, குண்டு மழைச் சண்டைகளில் ஈடுபட்டிருந்த 17 நாடுகள் – ஆயுதங்களைக் கீழே போட்டன.
தமக்கென ஒரே நாணயமான யூரோவை [Euro - €] உருவாக்கின.
இடையே இருந்த எல்லைக்கோடுகளையும் அழித்தன.
ஒரே மாதிரியான வருமான மற்றும் வணிக வரி விதிமுறைகளை – வாட் [VAT] – Value Added Tax – பொருள் மதிப்பேற்ற வரியை - ஏற்படுத்தின.
சில வருடங்களில் யூரோ அமெரிக்க டாலரை மதிப்பில் மிதித்தது.
அதன் ஒரு வெளிப்பாடாகத் தானோ என்னவோ – யூரோவுக்கு சமீபகாலமாக சனியன் பிடித்திருக்கிறது என சொல்வோர் நிறையப் பேர் உண்டு.
க்ரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து, போலாந்து, ஒரு அளவுக்கு பல்கேரியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளே போண்டி நிலையை எட்டிய பிறகு, ஐரோப்பா என்ற கண்டத்தின் ஒற்றுமை என்ற சொல்லை அந்த அமைப்புக்காகப் பயன் படுத்தினால், பிறர் அதை “லந்து” என நக்கல் செய்யக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதால் அந்த அமைப்பை ஐரோப்பிய பொருளாதார ஒருமை என்போம்.
அங்கு உள்ள அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான வருமான வரி [சுமார் 33.33%] எனவும் ஒரே மாதிரியான VAT – 15% என 80 களில் ஏற்பாடாயிருந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, இன்று எல்லாமே குண்டக்க மண்டக்க.
தங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்திக் கொள்ள, ஒரு சில நாடுகள் – உதாரணம் அல்பேனியா, பல்கேரியா, பாஸ்னியா ஹெர்த்ஸகோவினா – வருமான வரியை 0 முதல் 20% சதவிகிதத்திற்குள் அடக்கியுள்ளன.
பொருள் மதிப்பேற்ற வரி – மிக அதிகம்: ஹங்கேரி – 27%. மிகக் குறைவு [ஐ.பொ.ஒ வின் எல்லைக்குள் இல்லாத, ஐரோப்பிய நாடான] ஸ்வித்ஸர்லாந்து 8%.
நாணய ஒற்றுமையிலும், ஐரோப்பியர் அல்லாதோருக்கான விசா விஷயத்தில் மட்டும் ஒன்று சேராத இங்கிலாந்து – 80களில் ஒப்புக்கொண்டதற்கு கிட்டத்தட்ட ஒப்பிடும்படியான – வருமான/வணிக வரி விகிதாச்சாரங்களை கடைப்பிடிக்கிறது. அவை முறையே சுமார் 33.33.% 20%.
ஸிகரெட், மதுபானம் விறபனை விஷயத்தில் இன்னமும் அதிகமான குழப்பங்கள் உண்டு.
கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் – விஸ்கி பிராந்தி போன்ற மது பானங்களை ஒரு சாதாரண கடையில் வாங்கும்போது ஒவ்வொரு நுகர்வோரும் மொத்தத்தில் 85% கலால்-சுங்க-வணிக வரிகள் செலுத்துகிறார்கள்.
உதாரணத்திற்கு லண்டன் நகரின் பிரதான வீதிகளில் [உதாரணம் சென்னையின் அண்ணா சாலை] ஒரு ப்ளாக் லேபல் விஸ்கி புட்டியின் [750 ml – அதாவது ஃபுல்] விலை £22 [ரூ.1936]. அதில் வரி மட்டும் ரூ.1646. அதாவது விஸ்கியின் விலை ரூ.300 மட்டுமே!
கிட்டத்தட்ட இதே விலை வரி விகிதாச்சாரம் தான் இந்தியாவிலும்.
ஒருவர் ரூ.500 கொடுத்து வாங்கும் விஸ்கியின் மீது விதிக்கப்பட்டுள்ள வரி சுமார் ரூ.400!
இதில் தமாஷ் என்னவென்றால் – ஒவ்வொரு விஸ்கி போன்ற மதுபான புட்டியிலும் 42% தான் சாராயம் [ethyl alcohol].
மற்றவை சற்றே சுத்தீகரிக்கப்பட்ட குழாய் நீர் தவிர ஓரிரு சொட்டு ஸ்காச் போன்ற சமாச்சாரங்கள்.
சுத்தமான எரி சாராயத்தின் தொழிற்சாலையிலான உற்பத்தி அடக்க விலை – லிட்டருக்கு இன்று ரூ.25!
அதில் 42% தான் ஒரு ஃபுல் பாட்டிலில் அடைக்கப்படுகிறது.
ஆக சாரயத்தின் விலை ரூ.10.50. தண்ணீர், புட்டி, லேபிள் என எல்லாவற்றையும் கணக்கிட்டால் மொத்தம் ரூ.20ஐத் தாண்டாது.
ஆனால் விற்பனையாகும்போது அதன் விலை ரூ.500!
இதில் ரூ.400 வரி என்றால், சுருக்கமாகச் சொன்னால், ரூ.80 வரை லாபமிருக்கலாம்!
நிலை இவ்வாறு இருக்க, எந்த முதலாளியாவது இப்படி கன்னாப்பின்னாவென வரிகள் விதிக்கப்பட்டிருக்கும்போது – தங்களது தொழிற்சாலைகளின் உண்மையான உற்பத்தித் திறனை [true installed capacity] வெளியிட்டு அதற்கான வரிக்கட்டணங்களை சரிவரச் செலுத்த – மாமன்னன் அரிச்சந்திரனின் அவதாரங்களல்ல.
ஆகையால் கணக்குகளில் கோல்மால் செய்து – உருவாகும் கருப்புப் பணத்தை அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க ஒரு புறம் பயன்படுத்தி – சாராயத்தை உருவாக்கித் தர உதவி செய்யும் சர்க்கரை ஆலைகளை நட்டத்தில் ஓடுவதாக ஒப்பாரி வைக்கிறார்கள்.
வேலிகளுக்கு ஓணான்கள்சாட்சி என்பது போல இந்தப் பொய்க் கணக்குகளுக்கு ஒப்புதல் வாக்குமூலத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அளிக்கிறார்கள்.
சாராயம் உறபத்தியாகத் தேவையான மூலப்பொருள் கரும்பு.
ஒரு டன் கரும்புக்கு – விவசாயிக்குக் கிடைக்கும் தொகை – கேவலம் ரூ.1600!
அதிலிருந்து சர்க்கரை, வெல்லம், மொலாஸஸ், எரி சாராயம், அதனை உபயோகித்து உருவாகும் மது பானம், சக்கையான பகாஸ் எல்லாமாகச் சேர்ந்து ரூ.24,500 ஐ பிறருக்கு வருமானமாக உருவாக்கின்றன.
அந்த வருமானம் பயங்கர பண, ஆயுத, அரசியல், ஆள் பலத்தை ஒரு சிலரின் கைகளில் அடக்கம் செய்யும் அவலம் வேற.
அதிகார, பண பல துஷ்பிரயோகத்திற்குக் கேட்கவா வேண்டும்?
கருமபைத் தின்று, கரும்பு உற்பத்தியின் கூலியையே கொடுக்காமல், அதன் மொத்த லாபத்தையும் முழுவதுமாக மலைபோல விழுங்கும் மஹாதேவர்கள் இன்று அதிகம். அவர்கள் – பெரிய மனிதர்கள், நியாயஸ்தர்கள், பாராளுமன்ற உறுபினர்கள், மந்திரிகள், மந்திரிகளின் முந்திரிகள்!
கிட்டத் தட்ட இதே அதோகதிக் கதை தான் ஐரோப்பாவிலும். என்ன, ஒரு சில வித்தியாசங்கள் உண்டு.
சாராயத்தின் உறபத்தி அடக்க விலையைப் போல – அங்கு உபயோகிக்கப்படும் கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் வெளி நாடுகளிலிருந்து மிகவும் குறைந்த விலையில் இறக்குமதி ஆகின்றன.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல நமது பகுதியிலிருந்து ஏற்றுமதியாகும் ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம்.
திருப்பூரிலிருந்து ஒரு சட்டை யூரோ [€] 3 [ரூ.180] என ஒரு உதாரணத்திற்குச் எடுத்துக் கொள்வோம்.
[அவ்வளவு பணம் இப்போது கிடைப்பதில்லை என்பதும், கிடைப்பதாக இருந்தாலும் மின்சாரத் தட்டுப்பாட்டால் பாடு திண்டாட்டம் என்பதெல்லாம் வேறு விஷயம்.]
அது ஐரோப்பவின் தெருக்களில் விற்கப் படும்போது அதன் விலை €28 [ரூ.3000]! இடைத் தொகை €25 ஐ பின்வருமாறு பிரிக்கலாம்:
திருப்பூரிலிருந்து சென்னை – சென்னைத் துறைமுகத்திலிருந்து ஐரோப்பா – போக்குவரத்து – பாக்கிங், காப்பீடு, சுங்க இலாக்காப் பரிசோதனை, கண்டெயினர் ரொப்பல் – ஆகியவற்றுக்கான செலவு - € 1 [ரூ.70].
ஐரோப்பாவில் – ஒரு பேச்சுக்கு - € 4 மீதான [அதாவது இறக்குமதி அடக்க விலை] மீது 20% இறக்குமதிச் சுங்க வரி என வைத்துக் கொள்வோம்:
அதன் துறைமுக அடக்க விலை [வரிகள் உட்பட] € 5!
“மிச்சமுள்ள’ €23ல் உள்ளூர் வரிகள், கடைகளின் வாடகை, ஊழியர்களின் சம்பளம், போக்குவரத்துச் செலவு, மின்சாரக் கட்டணம், வங்கிகளின் வட்டி, கடையில் பொருள் இருப்பதால் ஆகும் maintenance செலவு எனக் கணக்கிட்டால் – மொத்தம் ஆகும் செலவினம்: €10.
லாபம்: €13 [ரூ 900].
ஆக உருவாக்கிய திருப்பூர் திருமூர்த்திக்கு ரூ.180. விற்ற ஐரோப்பிய தாமஸுக்கு லாபம் ரூ.900!
நம்ம ஊர் கரும்பு விவசாயியின் சோகக் கதை தான்!
“இந்த லாபம் கூட இல்லாவிட்டால் எப்படி வியாபாரம் செய்வதாம்,” என அங்குள்ள வியாபாரிகள் இன்றும் கேட்கிறார்கள்.
மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டி இந்தக் கொள்ளை லாபத்தினால் கொழுத்து, கொழுப்பெடுத்த ஐரோப்பியர்கள் பணத்தை குஜால் விஷயங்களில் [உதாரணம் க்ளப்களில் சாராயம், போதை இஞ்ஜெக்ஷன்கள், பெண்களின் கேளிக்கை நடனம், விபச்சாரம், இத்யாதி] செலவிட்டே பழகி விட்டார்கள்.
வெவ்வேறு சமூக, அரசியல், பொருளாதார, சீதோஷணக் காரணங்களால் இறக்குமதிச் சரக்கு வரத்துக் குறையும்போது, இஷ்டத்துக்கு வங்கிகளில் கடன் வாங்கி – அதைத் திரும்பச் செலுத்த வக்கில்லாமல் போக – முதலில் வங்கிகளுக்கு ஆப்பு, பின்பு நாடே கடன் கேட்கும் ஆப்பக்கடை!
இதற்கெல்லாம் – மூன்றாம் உலக நாடுகளில் நடக்கும் கலவரங்கள் தான் மூல காரணம் என அங்கலாய்க்கும் வெள்ளையர்கள் நிறைய உண்டு.
அவர்கள் சொல்வதிலும் கொஞ்சம் உண்மையும் உண்டு.
அந்தக் கலவரங்களை உருவாக்க – சில்லறைப் பிச்சையை இடுவதும் அதே நாடுகளிலுள்ள அரசியல் அமைப்புக்கள், ஆயுத உற்பத்தித் தொழிலதிபர்கள், சில மதச் சார்பான சக்திகள். ஆக அவர்களுக்குத் தெரியாத உண்மையா? அங்கே பணி புரியும் சிப்பந்திகள் வெளியே உணவு விடுதிகளில் உளர – அதைக் கேட்டோர், அரைகுறையாய் ஆளாளுக்கு குருடர்கள் யானை – சுவர்போல, ரப்பர் குழாய்போல, தூண் போல, துடைப்பம் போல என வருணித்ததற்கு ஏற்ப மூன்றாம் உலக நாடுகளை அதாவது நம்போன்ற முன்னேறாத காட்டுமிராண்டி நாடுகளின் பொருளாதாரத்தைப் பழிக்கின்றனர்.
கலவரங்களின் தந்தைகளான நல்லவர்கள் – தங்கள் சிசுக்களையே எவனோ விருந்தாளியின் மக்கள் என்கின்றனர்..
நமது அரசியல்வாதிகளும், அந்த விருந்தாளி எங்களது அடுத்த வீட்டில் தான் குடியிருக்கிறான் என்பது போலச் சொல்லி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட எண்ணங்கள் என் மனதில் அன்று ஓடின.
இன்றும் ஓடுகின்றன.
இந்த வக்கிரத் தனமான பொருளாதார – உலகமய மாயையின் ஒரு வெளிப்பாடு தான் – மார்க்ஸ் புகைப்படத்தைத் தாங்கிய கடன் அட்டை!
வயிற்றெரிச்சல் தான்.
இதை ஒரு சிலர் படிப்பார்கள் என நம்பும் நான் – இதனால் எல்லாம் உலகம் திருந்தும் என நம்பவே இல்லை!
2ஆம் உலகப் போரில் தோற்ற ஜெர்மனியும் இத்தாலியும் – பிடிக்க நினைத்த இடங்களை – சாமர்த்தியமாக – பொருளாதார கில்மோத்ரி வேலை என்ற பணியில் இறங்கி வெற்றியும் கண்டுவிட்டனர்.
கிட்டத்தட்ட அதே வெற்றியை அதே போரில் தோற்ற ஜப்பானும் அடைந்ததன் உதாரணம் தான் – சோனி ஸ்தாபனத்தின் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ள விந்தை! தென் கொரியா, ஏன் தைவான் போன்ற நாடுகளிலுள்ள முக்கியக் கம்பெனிகளை வழி நடத்துவதும் ஜப்பானியத் தொழிலதிபர்கள்.
இவர்களுடன் சீனா என்ற ஒரு சக்தி சேர்ந்து இல்லவற்றையும் ஒரே சகதி ஆக்கிவிட்டது.
ஐரோப்பாவின் விலைக்குறைவான நல்ல பொருட்களின் இறக்குமதி மோகத்தைப் பயன்படுத்தி – ஏதோ ஏமாந்த சோணகிரிபோலக் கடன் கொடுப்பதாக நடித்து – ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில் உறபத்தியை அழித்து – அந்தக் கடந்தொகையை வாளாக்கி – உலகப் பொருளாதாரத்தையே மிரட்டி, விரட்டி, விறகாக்கி, வரட்டு விராட்டியாக்கிக் கொண்டிருக்கிறது.
சீனாவின் இந்த வளர்ச்சியை மட்டும் தான் நான் அன்று கணக்கிடவில்லை.
மற்ற எல்லாமே 1985ல் முதல் முறை ஜெர்மனிக்குச் சென்ற போதே என் கண்களுக்குத் தெரிந்ததால், அதை ஒரு ஹேஷ்யமாக அங்குள்ள உளவு ஸ்தாபனத்தின் அதிகாரியிடம் தெரிவித்தேன்.
இரண்டு ஜெர்மனிகளும் இணையப் போகின்றன என்ற இரகசியத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“அப்படி ஒன்று நிகழ்ந்தால் அது நிகழ்ந்தபோது உங்களுக்கு அரசு விருந்தினராக அழைப்பு ஒன்றை அனுப்புவோம்,” என்றார்.
வந்தது.
சென்றேன்.
கொஞ்சம் ஊரெல்லாம் சுற்றியபோது என்னிடம் – இணைந்த ஜெர்மனி என்ன சொல்கிறது என வினவப்பட்டது.
போட்ஸ்டாம் நகரின் சந்தைத் தெருவில் நடந்தபோது ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“அழகான – பெரிய கார்களில் மேர்கு ஜெர்மானிய இளைஞர்கள் வந்து எனகளது காதலிகளை எல்லாம் களவாடிச் செல்கின்றனர். எல்லாவற்றுக்கும் அரசின் ஆணையையே எதிர்பார்த்துச் செயல்பட்ட எங்களுக்கு இந்தப் புதுச் சுதந்திரம் குழப்பமாக இருக்கிறது. சோஷலிச முறையில் இயங்கிய இயந்திரங்கள் – முதலாளித்துவத் தொழிற்சாலைகளில் எடுபடாத நிலையை உணரும் நாங்கள் – வாழ்க்கையில் இனி எல்லாவற்றையும் புதிதாகக் கற்கவேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டோம். மேலும், எங்களுக்கே சோற்றுக்கில்லாத வேளையில் வெளி நாட்டவர் இங்கு வந்து சம்பாதிப்பதைப் பார்த்தால் பொறாமையாக, கோபமாக, ஏன் ஆத்திரமாகக் கூட இருக்கிறது,” என பலர் கூறினர்.
அதன் ஒரு வெளிப்பாடாக – பல இந்தியர், கருப்பர், அராபியர், கிழக்கு ஐரோப்பியப் பழங்குடியினர் ஆகியோரை ஜெர்மனியில் புதிதாக முளைத்த நாஸி இளைஞர்கள் [ஹிட்லரின் கட்சிக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள்] தாக்கினர், கொன்றனர் என்றெல்லாம் பின்பு செய்தி வந்தது.
அப்படிக் கூட நடக்கும் வாய்ப்புண்டு என 1989ல் ஆரூடம் சொன்னதாக ஞாபகம்.
இன்று அதன் ஒரு வக்கிர வெளிப்பாடாக, மார்க்ஸ் புகைப்படத்தை வைத்து ஒரு கடன் தரும் ப்ளாஸ்டிக் அட்டை!
உண்மைதான்!
கலிகாலம் முற்றி விட்டது!
|